"ஏ குருவி... சிட்டுக்குருவி"... உலக சிட்டுக்குருவிகள் தினம் !
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஒன்றில் கூடு செய்யும் முறையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்கள் உணர்த்தி வருகின்றனர்.
உலகில் வாழும் ஜீவராசிகளில் மனித குலத்துக்கு நெருக்கமான சிலவற்றில் சிட்டுக்குருவிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பூச்சி இனங்கள், தானியங்கள் என சிட்டுக்குருவிகளுக்கான உணவும் எளிமையானதுதான்.
உள்ளங்கையில் அடங்கிப் போகும் உருவம், சுறு சுறு துறு துறு செயல்பாடு, செவிகளைக் குளிர்விக்கும் கீச்சு கீச்சு என்ற சப்தம் என சிட்டுக்குருவிகளை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து 90கள் வரை கூட கணிசமாகக் காணப்பட்ட சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதன் பிறகு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
காற்றோட்டம் கொண்ட கூரை வீடுகள், ஓட்டுவீடுகளில் கூடு கட்டி வாழும் தன்மையுடைய சிட்டுக்குருவிகளை காங்கிரீட் கட்டிடங்கள் மனிதர்களிடமிருந்து பிரித்து வைக்கத் தொடங்கின.
அதுமட்டுமின்றி அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து, காலநிலை மாற்றம் என சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு ஏராளமான காரணிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
கிராமங்களிலும் கூட பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்ததால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் சிட்டுக்குருவி போன்ற சிறு உயிரினங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் பரவலான கருத்து உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பறவை இன ஆர்வலர்களின் முயற்சியால் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி இந்த சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகேயுள்ள பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் தமிழரசன் என்பவர், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளைத் தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
மாணவர்கள் தயாரிக்கும் கூடுகளை அவரவர் வீடுகளில் வைத்து, சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தமிழரசன் உணர்த்தி வருகிறார்.
Comments